Wednesday, October 7, 2015

ஏக்கம்
“அம்மா ......டைம் ஆச்சுமா .....”
“.......இதோ ரெடி ஆய்டுச்சு.....இந்தா சாப்பிடு.....”
கண்களில் வருத்தமும்,மனதில் கவலை கலந்த ஏக்கத்துடனும் அந்த தோசையை அவன் தட்டில் பரிமாறினாள்! அவனோ எதிர்காலம் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் தோசையை வாயில் வைத்தான்.அடுத்த துண்டை பிய்த்து வாயில் போடும் போது பயம் பற்றிக்கொண்டது!
     இன்னைக்கு அம்மா சாப்பாடு போடுறாங்க......நாளைக்கு யாரு போடுவாங்க?!? “ஹாஸ்டல் ‘ன்னா எப்படி இருக்கும்...எப்படி நடந்துக்கணும்” யோசித்த உடன் பயம் அவனை சூழ்ந்துதுகொண்டது!
     “எல்லாம் படிப்புக்காகத்தான...விடுறா......” அவன் மனம் அவனை சமாதானப்படுத்தியது! அப்பா அவனது உடமைகளை சரிப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.அவன் தம்பியோ எதுவும் புரியாமல், அனால் ஒன்றை மட்டும் நினைவில் பதிய வைத்தான். இனி அவன் அண்ணன் அவனோடு இருக்க போவதில்லை என்று! விளையாடப் போவதில்லை என்று! சண்டையிடப் போவதில்லை என்று! எப்பொழுதும்...............
     “நரேன்.....மணி 7.20 ஆய்டிச்சு........கிளம்பலாமா?”...அப்பாவின் குரல் அவன் கண்ணீரை தட்டி எழுப்பியது!
     “அம்மா போய்ட்டு வரம்மா....போன் பண்றம்மா.....உடம்ப பாத்துக்க..., தம்பிய பாத்துக்க.....அழாத மா.................”
     அம்மாவின் கண்ணீர் அவன் சொற்களைக் கழுவி விட்டதால், மேலும் வந்த அவன் சொற்கள் கரைந்து போயின! அம்மாவின் உருவமும்,தம்பி உருவமும் மறைய மறைய அவன் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது! உருவம் முழுவதுமாய் மறைய,கண்ணீர் சிறியதாய் தோன்றியது!
     இரயில் நிலையத்தில் அவனையும் அறியாமல் அவனது கண்ணீர் எட்டி எட்டிப் பார்த்தது! “என்ன சார் பண்றது?.........படிப்புக்காகத்தானே எல்லாம் செய்ய வேண்டி இருக்கு...நமக்கு மட்டும் என்ன ஆசையா பிள்ளையை பிரிஞ்சி இருக்கணும்னு?....உலகம் எங்கேயோ போய்ட்டு இருக்கு சார்.......”அப்பாவின் தொலைபேசி உரையாடல் சற்றே அவன் காதுகளில் உரைத்தது!
     யோசித்தான்,தன்னை பற்றி யோசித்தான்.தன் நிலையைப் பற்றி யோசித்தான்.எதற்காக கல்விக்குப் பேர் போன நாமக்கல் மாவடடத்திற்கு செல்ல போகின்றோம் என்று!.......தன் வீட்டில் தான் இருந்த நிலை என்ன என்று!..........தன் பள்ளியில் தன் நிலை என்ன என்று!
     கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டு இருந்தவனை இன்னும் சற்று நேரத்தில் நீ நிகழ் காலத்திலேயே பயணிக்கப் போகிறாயடா........ இரயிலில்....... என்று அந்த அறிவிப்பு அவனை அறிவுறுத்தியது!
     சற்று நேரத்தில் அவனது உடமைகளை இரயில் சுமக்க, கண்ணீரையும், கவலை கலந்த யோசனைகளையும் அவன் சுமந்தான்! கடந்த கால நினைவுகளோடு நிகழ் காலத்தில் பயணித்தான் எதிர்காலத்திற்காக!
     என்னமோ தெரியவில்லை, இத்தனை நாட்கள் இல்லாத பாசமும் பந்தமும் இன்று மட்டும் வந்தது என்று.....கண்ணீருக்குக் கண்கள் மேல்!  இணைபிரியா நெருக்கத்தில் இருந்தனர் அந்த திடிர்ப் பாசக்காரர்கள்!
     அப்பாவோ தனது ஆசானும் தன்னுடன் பயனிகின்றாரே,எப்படி அவருடன் பேசாமல் வருவது என்று தன் சோகத்தையும் கவலைகளையும் பல மூட்டைகளில் கட்டி வைத்து விட்டு அவருடன் பேசிக் கொண்டடே பயணித்தார்.
     அந்த சிறுவனுக்கு அப்போது புரிந்ததா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை! வெளி உலகத்திற்காக சோகங்களும் கண்ணீரும் கட்டப்பட்டு இருகின்றன, தானும் தனது மனைவி போலவே அழுது தனது பாரத்தை வெளிகாட்ட இயலுவது அவ்வளவு சுலபமில்லை என்று....அவனுக்கு அப்போது தோன்றவில்லை தனது தந்தையின் பாசம் எத்துனை உயரமென்று!...........

     கடந்த காலமும் எதிர் காலமுமாய் பயணித்து கொண்டு இருந்த அவனது பயணத்திற்கு முழுக்கு போட்டது அந்த வாசகம்!
“ஈரோடு சந்திப்பு தங்களை அன்போடு வரவேற்க்கின்றது!................................”
யாருக்குத் தெரியும் அது அன்பா வெறுப்பா என்று!...............................

                அவனது அணைத்து சிந்தனைகளையும் ஓரம் கட்டி விட்டு முதலில் வந்து நின்றது அந்த சிந்த்தனை. “எப்படி இந்ந்ந்ந்ந்த பஸ்-ல போக போறோம்? இவ்ளோ கூடமா?....அதுவும் இவ்ளோ பெரிய பெட்டியோடவா?.. சாமி என்ன கொடுமை இது?...”
     ஒரு வழியாக கூட்டத்தோடு கூட்டமாக அவனையும் அன்பாய்  அழைத்துக் கொண்டது அந்த பேருந்து.அவனுக்காக இரக்கப்பட்டு அவனையும் அவனது தந்தையையும் தன் மடியில் அமர்திக்கொண்டது அந்த இரக்க குணமுள்ள பேருந்து.(யாருக்கு தெரியும்?இரக்கப்பட்டது தந்தைக்காகக் கூட இருக்கலாம் அல்லவா!) நன்றி பேருந்து நண்பா!
     எங்களை பிரிய மனமில்லை போலும்!அதற்காகத்தான் அன்பாய் அமர்திகொண்ட எங்களை போக விடாமல் அத்துணை பேரைக்கொண்டு தடுக்க முயற்சித்தாய்? அப்பப்பா வெளியில் வர எவ்வளவு கஷ்டம்! இறுதியில்  ஜெயித்தது என்னமோ நாங்கள் தானே! (இதிலும் எங்களுக்காக விட்டு கொடுத்தாயோ நண்பனே!)
     பள்ளி வந்து விட்டது! “ஹாஸ்டல் போய்ட்டு அப்பறம் வாங்க!” சொன்னவருக்கு நன்றி சொல்லிவிட்டு பள்ளி விடுதியை தேடினார்கள் அங்கு வந்திருந்த பலரும்....அவர்களுடன் நாங்களும்!
     இவனுக்கென்று ஒரு அறை!உள்ளே அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஒரு தூசி கூட இல்லை.புதிதாய் கட்டப்பட்ட விடுதி அல்லவா! என்ன.... சற்று ஜில்லென்று இருக்கும். இருக்கட்டுமே! கவலையும் கண்ணீருமாய் சூடாக இருந்த அவனுக்கு அதாவது குளிர்ச்சி தரட்டுமே!
     பாயை விரித்தான்.தந்தையும் மகனும் அமர்ந்தார்கள். ஆறு மணி நேர இடைவெளி, பயணம் ஆகியவை அவனுடைய அறிவையும் பகுத்தறிவையும் அதிகரித்து இருந்தது எனலாம்.
     இப்போது நரேன் அழகாய் புரிந்து கொண்டான்.தன் தந்தையின் கண்களை! முதன்முதலில் புரிந்து கொண்டான்! அதன் தவிப்பை! ஆதங்கத்தை!....ஏக்கத்தை!.....கவலையை!.....
     அவர் கண்கள் வழியே அவனது பேச்சும் சொற்களும் மூடப்பட்டன! ஆனால் இருவருக்கும் இடையில் மௌனம் மிக அழகாய் பேசியது! நேரம் வந்தது போலும்.கிளம்ப வேண்டும்! நரேனை பார்த்து, “.....நரேன்...பத்திரமா இருப்பா, நல்லா சாப்பிடு, நல்லா படி, நல்லா.......................................................... .................................... ................................... ................................... ................................... ................................... ................................... ................................... ................................... ................................... ................................... ...................................” நரேன் காதில் விழ வில்லை.மணம் ஏற்க வில்லை.வீட்டிற்குப் பறந்து விட்டது. ஆனால் துளியும் ஹாஸ்டல்-க்கும் ஹாஸ்டல் வாழ்க்கைக்கும் அவன் சம்மதிக்காமல் இல்லை.அவர்களுக்காக அவர்கள் ஆசைகாக ஏற்றுகொண்டான்!
     அப்பா விடைபெற்றுக்கொண்டார்.கண்ணீரே இல்லாத அழுகையுடன்! முகத்தில் காட்டாத துக்கத்துடன்! சிரிப்பே இல்லாத முக பாவனையுடன்! மணி மூன்று முப்பது!
     விதியின் விளையாட்டை அதன் போக்கிலே விட்டு விட்டு தன் அறைக்கு சென்று, தன் மனதை திறந்து அதற்குள் நுழைத்தான்! யாருமே இல்லாத அவன் தனி உலகத்திற்குச் சென்றான்! யாரும் அவனை கேலி, கிண்டல் செய்யவோ, சந்தோசப்படுதவோ, ஆறுதல் சொல்லவோ அங்கில்லை. ஆரம்பித்தான்! தன் உள்ள குமரளையும் மனக்கவலையையும் நினைத்து நினைத்து தன் பிரிவை நினைத்து கதறிக் கதறி அழுதான்! தன் சோகம் தீரும் மட்டும் அங்கேயே வசிக்கும் தன் அன்புத்தோழன் “கண்ணீரோடு” சேர்ந்து அனைத்தையும் கொட்டித் தீர்க்க முயற்சித்து     தோற்றுப்போனான்!
     இரவு ஏழு முப்பதுக்கு டின்னெர் என்று அறிவித்தார்கள்! மனதை பூட்டி விட்டு மெஸ்-க்கு சென்றான். தட்டை ஏந்திக்கொண்டு அனைவரும் வேகமாக நடப்பதை அரசு பள்ளிகளில் பார்த்து கேலி கிண்டல் செய்தவனுக்கு அவர்கள் கொடுத்த பரிசு, இதோ இவன் தட்டையும் டம்பளர்யும் எடுத்துக்கொண்டு சக மாணவர்களோடு ஓடினான்!             நீண்ட மிக நீண்ட வரிசைக்கு பின் அங்கு சென்று தரையில் அமர்ந்துக்கொண்டான். இட்லி வண்டி வந்தது.அவன் தட்டை கீழே வைத்துக்கொண்டு அதேயே பார்துக்கொண்டு இருந்தான். “டேய் நேரன், தட்டை கையில் எடுத்து மேலே காட்டு டா....அப்பதான் போடுவாங்க....இல்லனா அப்படியே போய்டுவாங்க.....ம்ம்ம்ம் கையில் எடு.....” சொன்னவுடன் தட்டை தூக்கி இரண்டு இட்லி வாங்கினான்.சட்னிக்கு ஐந்து நிமிடம், சாம்பாருக்கு ஐந்து நிமிடம், அது திரும்பி வர பத்து நிமிடம் என அங்கேயே உட்கார்ந்து இருந்தாலும், இட்லியை விட அவன் கண்ணீரை தான் அதிகம் விழுங்கிக்கொண்டு இருந்தான்!
 “....அம்மா......ஏன் மா !!!!.........................”
“டேய் ....அம்மாவை கஷ்டப்படுத்தாத , சாப்பிடு.........”
மணம் சொன்ன இரண்டாவதை செய்து முடித்தான்.
“டேய் கெளதம்...டாய்லேட் எங்கடா இருக்கு?.....”
“நம்ம ரூம்ல இருந்து வர வழில இருந்துசுல அங்க தான் டா....”
“ அங்க ஓடி போனாலே ஐந்து நிமிஷம் ஆகுமே டா...”
“.....அங்க தான் இருக்கு....வேற எங்கயும் இல்ல டா...”
கெளதம் சொன்ன இடத்திற்கு நரேன் நடந்தே சென்றான்.தண்ணீர் குடித்து விட்டு படுத்து கொண்டான்!
     அசதியில் இரண்டரை மணி நேரம் ஆழ்ந்து தூங்கி விட்டான். “நரேன்.......டேய் நரேன்....எழுந்திரிடா....என்னடா உன்னக்குத் தூக்கம் ? மடையா....எழுந்திரு!!!” பூட்டிய மனது தட்டி எழுப்பியது. மணி அதிகாலை இரண்டு முப்பது. அனைவரும் அசந்து தூங்கி கொண்டு இருந்தனர். இரண்டு மணி நேரம் எதை எதையோ அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்! நான்கு முப்பது மணிக்கு நண்பர்களோடு ஓடினான்!....... குளிப்பதற்கு!
     மிகவும் கடினமான மனதிற்கு அன்று மிக லேசாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டன. மூன்று நாட்களாய் வீட்டிற்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது!வீட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றதோ? யாருக்கு தெரியும்?
     “அம்மா!...அழாத மா.....ஏ சும்மா ரெண்டு நாளா அழுதுகிட்டே இருக்க....? அண்ண படிக்கத் தான போயிருக்கு! சாப்பிடு மா.....” அம்மாவை தன்னால் முடிந்த அளவு சமாதானம் செய்ய முயற்சி செய்தான் அரவிந்தன்- நரேனின் தம்பி....ம்ஊம் ....பயனில்லை.
     எங்கும் கண்ணீர்! எதிலும் கண்ணீர்! சாப்பிடும்போது அவன் முகம்.தூங்கும் போதும் தூங்கி எழுந்த போதும் தூக்கத்திலும் அவன் முகம்! என்ன செய்வது பாவம்! அப்பாவால் வெளி காட்டிக் கொள்ள முடியாத உணர்சிப்பெருக்கு!
     கடந்த மூன்று நாட்களை அவன் அங்கும், இவர்கள் இங்கும் மாறி மாறி நிம்மதியை தொலைத்துக் கொண்டு இருந்தனர்.
     நான்காம் நாள் மாலை பள்ளி முடிந்த பின், நண்பர்கள் உதவியோடு பள்ளியில் இருந்து வீட்டிற்கு போன் செய்தான்.
“.....அம்.....அம்மா......நல்லா இருக்கியா மா....”
“.....கண்ணீர் தனது சொற்களை முழுவதுமாக விழுங்க முயற்சிக்க, அதை சற்று வெற்றி கொண்டு அவனுடன் பேசினாள் அந்தத் தாய்!
நேரம் ஆக ஆக கொஞ்ச கொஞ்சமாக கண்ணீர் சொற்களை விழுங்கிக் கொண்டு இருந்தது!இருவருக்கும்!
மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் வாய்விட்டு அழுதே விட்டான்! தன் கண்ணீர் தன் தாயை நனைத்து விடக் கூடாது என்பதற்காக தொலைபேசியை துண்டித்தான்! கண்ணீரை துண்டிக்க முடியாமல்!
     நாட்கள் உருண்டோடின.....மிக விரைவாக சென்று கொண்டு இருந்தன...அதோடு சேர்ந்து இவனின் கடிதமும் தொலைபேசி உரையாடல்களும் அதை விட அதிகமாய் சென்றது.
     வாழ்கை கொஞ்ச கொஞ்சமாக பாடம் கற்பித்துக்கொடுத்தது இவனுக்கு. ஏற்ற... இறக்கம், வெற்றி ...தோல்வி, சுக.....துக்கம் எல்லாம். துக்கத்தை முதலில் பார்த்தால் வெற்றியும் ஏற்றமும் அவனை சம நிலை படுத்தியது. விதியின் விளையாட்டு விளையாடியது.

     காலங்கள் உருண்டோடின...மிக ஆழமான சந்தோஷத்துடனும் ஏக்கத்துடனும் இவனை எதிர்பார்த்துக் காத்திருந்த தாய்க்கு அந்த நாளும் நெருங்கியது.தன் மகனை வரவேற்கக் காத்திருந்தாள்! முதல் மாத விடுமுறைக்கு வருகின்றான் அல்லவா அவள் அன்பு மகன்,ஆசை மகன்!
     அவன் பட்ட அத்துணை விஷயங்களுக்கும் ஏங்கிய தவிபிற்கும், அந்த மூன்று நாட்கள் அவன் மனதிற்கு மிகப் பெரிய ஆறுதல் அளித்தது! வீட்டில் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்தவர்களை மீண்டும் பழைய ஏக்கம் தொற்றிக்கொண்டது காலண்டரை பார்த்தவுடன்!
கிளம்ப தயார் ஆனான்!அனால் ஏக்கமும் துக்கமும் சற்று குறைந்தவனாய்!
வழி அனுப்பிய தாய் மீண்டும் காத்திருந்தாள் அடுத்த விடுமுறைக்கு....தன் மகனின் வருகைக்கு!.........
மீண்டும் அதே இரயிலில் பயணித்து கொண்டு இருந்தவனுக்கு சற்று ஆறுதலாய் அவன் மணம் சொல்லிற்று........
“டேய் நரேன்......இன்னும் முப்பது நாள் தண்டா! நாளே வாரம் தான்.....இதே ட்ரைன்ல வீட்டுக்கு வரலாம்..........”
மனதின் எண்ணங்களோடு பயணம் தொடர்ந்தது!!!